உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா / பச்சை பசுமையின் போர்வை மண்டலபட்டி வியூ பாயின்ட்

பச்சை பசுமையின் போர்வை மண்டலபட்டி வியூ பாயின்ட்

கர்நாடகாவின் குடகு மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல குடகில் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவும். நீர்வீழ்ச்சிகள், காபி தோட்டங்கள், காவிரி ஆறு, ராஜாசீட் உட்பட குடகில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு பசுமை போர்வையாக பிரமாண்ட வியூ பாயின்ட் ஒன்றும் உள்ளது. குடகின் தலைநகர் மடிகேரியில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் உள்ளது மண்டலபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் மண்டலபட்டி என்ற மலை உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. மலை உச்சி சமதளமாக பச்சை, பசேலன காட்சி அளிக்கிறது. உச்சியில் உள்ள பாறை மீது நின்று எதிர் திசையில் பார்க்கும் போது, பசுமையின் போர்வையை கண்கூடாக கண்டு ரசிக்கலாம். நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விலகி, சில மணி நேரம் அமைதியான சூழலில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இந்த இடம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மலை அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு மலையேற்றம் செல்லலாம். கொஞ்சம் சவாலாக இருந்தாலும் பயணம் விறுவிறுப்பாக அமையும். மலையேற்றம் செல்ல முடியாதவர்கள் ஜீப்பில் பயணம் செய்யலாம். காபி தோட்டங்கள் நடுவில் ஜீப்பில் செல்லும் போது புதிய அனுபவமாக இருக்கும். மார்ச் முதல் ஜூன் வரை இந்த இடத்திற்கு செல்ல ஏற்ற காலம். பின், மழைக்காலம் ஆரம்பிப்பதால் இங்கு செல்வது அவ்வளவு எளிது இல்லை. இந்த நேரத்தில் சென்றால் மலை உச்சியில் வீசும் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு உண்டு. தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மண்டலபட்டி வியூ பாயின்ட் செல்ல முடியும். ஜீப்பில் 6 பேரை அழைத்து செல்வதற்கு கட்டணமாக 1,700 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து மடிகேரி 258 கி.மீ., துாரத்தில் உள்ளது. மடிகேரியில் இருந்து மண்டலபட்டிக்கு செல்ல பஸ் வசதி கிடையாது. வாடகை கார்களில் தான் செல்ல வேண்டும்.மடிகேரியில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் ஒரு சோதனை சாவடி உள்ளது. அதை கடந்த பின், சாலையின் இருபுறமும் இயற்கையை கண்டு ரசித்தபடி பயணிக்கலாம் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை