பாட்டு மற்றும் தொகை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
சங்க இலக்கியங்களுக்கு பாட்டு மற்றும் தொகை என்று முடியும்படியாக பெயர் வைத்துள்ளனர். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பன ஆகும். மூன்றாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட இந்த நுõல்களில், பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் தெய்வங்களைக் குறித்த பாடல்கள் உள்ளன. பரிபாடலில் 70 பாடல்கள் இருந்தன. ஆனால், நமக்கு கிடைத்தது 22 தான். 13 புலவர்கள் இதைப் பாடியுள்ளனர். முருகப்பெருமானைப் பற்றிய 31 பாடல்களில் எட்டு மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. திருமாலைக் குறித்த எட்டு பாடல்களில் ஆறு கிடைத்திருக்கிறது. சிவனால் உருவாக்கப்பட்ட வைகை நதியைப் பற்றிய 26 பாடல்களில் எட்டு தான் கிடைத்துள்ளது. காளியைப் பற்றிய ஒரு பாடலும், மதுரை நகர் பற்றிய நான்கு பாடல்களும் கிடைக்கவில்லை. நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை முழுமையாகக் கிடைத்தது நமது அதிர்ஷ்டம். பரிபாடலிலுள்ள முருகன் குறித்த பாடல்களில் முருகா! உன்னிடம் பொன், பொருளை வேண்டவில்லை. உன் அன்பையும், அருளையும் தருவாயாக! என்று வேண்டும் பாடல்கள் மனதை உருக்குவதாக உள்ளது. மதுரை நகரின் அழகை, திருமாலின் நாபியில் பூத்த தாமரைக்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளது.