ராமானுஜரின் நேயர் விருப்பம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ராமானுஜரின் நேயர் விருப்பம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar நமக்குப் பிடித்த திரைப்படப் பாடல்களை நேயர் விருப்பம் என்ற பெயரில் ஒலி, ஒளிபரப்பு செய்கிறார்கள் இல்லையா! அதே போல, திருப்பாவையில் ராமானுஜருக்கு பிடித்த பாடலாக அமைந்தது, திருப்பாவையிலுள்ள பதினெட்டாம் பாட்டு. கண்ணனின் மனைவியான நப்பின்னை பிராட்டியை, ஆண்டாள் துயிலெழுப்பும் பாடல் இது. ஒருமுறை தனது ஆசாரியர், பெரிய நம்பியின் இல்லத்துக்கு ராமானுஜர் சென்றார். வாசலில் நின்று, திருப்பாவையின் பதினெட்டாம் பாடலான உந்து மதகளிற்றன், ஓடாத தோள் வலியன் என்ற பாடலைப் பாடி, கதவைத் தட்டினார். அப்போது, தனது வளையல்கள் குலுங்க வந்த பெரிய நம்பியின் திருமகள் அத்துழாய், கதவைத் திறந்தாள். அவளைப் பார்த்ததுமே, ராமானுஜர் மயங்கி விழுந்து விட்டார். பதறிப்போன அத்துழாய், தந்தையிடம் சென்று நடந்ததைச் சொன்னார். பதறாதே! உந்து மத களிறு அனுஸந்தனமாயிருக்கும் என்றாராம் பெரிய நம்பி.அதாவது அந்தப் பாடலைப் பாடியதும் தான், நப்பின்னை கண்ணனைக் காண ஆயர்பாடி பெண்களுக்காக கதவைத் திறந்தாளாம். அதுபோல், அத்துழாய் கதவைத் திறந்ததும், அவளையும் நப்பின்னையாகக் கருதி ராமானுஜர் மயங்கி விட்டார் என்ற பொருளில் நம்பி அவ்வாறு சொன்னார். பெண்களைத் தெய்வமாகப் பார்த்த காலம் அது. அந்தக்காலம் மீண்டும் மலர, கண்ணனை வேண்டுவோம்.