₹300 வீதம் 19 ஆயிரம் பக்தர்களை ஏமாற்றிய ஊழியர் உட்பட 3 பேர் கைது
₹300 வீதம் 19 ஆயிரம் பக்தர்களை ஏமாற்றிய ஊழியர் உட்பட 3 பேர் கைது | Tirupati | Darshan Ticket Scan and distribute திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்து ஒரிஜினல் டிக்கெட்டுகள் போல் விற்பனை செய்த விவகாரம் அம்பலமாகி உள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட திருப்பதி கோயிலின் ஸ்கேன் பிரிவு ஊழியர் லட்சுமிபதி, மணிகண்டா மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் சில மாதமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம் நைசாக பேசி தங்களிடம் டிக்கெட் இருப்பதாகவும், சுவாமியை உடனே தரிசிக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி போட்டோ ஷாப் மூலம் ஸ்கேன் செய்த போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களுக்கு உதவியாக 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணியில் உள்ள லட்மிபதியுடன் கூட்டணி அமைத்து தேவஸ்தானத்தை ஏமாற்றியது உறுதியானது. கடந்த 14ம் தேதி ஐதராபாத்தை சேர்ந்த பக்தர்கள் 300 ரூபாய் தரிசன டிக்கெட்களுடன் சாமி கும்பிட சென்றனர். அவர்களது டிக்கெட்டுக்களை தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் சோதனை செய்தனர். அது போலி என தெரிந்தது. அந்த டிக்கெட்டுகளை மணிகண்டா, ஜெகதீஷ், சசி, பானு பிரகாஷ் கொடுத்து அனுப்பியதும், தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் ஊழியர் லட்சுமிபதி டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யாமல் கோயிலுக்கு அனுப்பியது உறுதியானது. இதுபோல் 300 ரூபாய் போலி டிக்கெட்டுகளை 19 ஆயிரம் பக்தர்களிடம் 57 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் திருமலை போலீசில் புகார் கூறினர். ஸ்கேன் செய்யும் ஊழியர் லட்சுமிபதி, மணிகண்டா, ஜெகதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சசி, பானு பிரகாஷ் ஆகியோரை தேடுகின்றனர். போலி தரிசன டிக்கெட் விவகாரம் குறித்து தனி குழு அமைத்து தேவஸ்தானம் விசாரணை நடத்தி வருகிறது.