தாயையும், குட்டியையும் சேர்த்து வைத்த ட்ரோன்... மனதை உருக்கும் காட்சிகள்
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டம், மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் கடந்த 29-ந் தேதி காலை 8:30 மணிக்கு 5 மாத குட்டி யானை ஒன்று தனியாக பிரிந்தது. இதை பார்த்த பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து குட்டி யானையை மீட்டு தாயோடு சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அவர்களுக்கு கை கொடுத்தது ட்ரோன் தொழில்நுட்பம். தாய் யானையை விட்டு குட்டி யானை பிரிந்து சில மணி நேரங்கள் தான் ஆகியிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட வனத்துறையினர் உடனடியாக ட்ரோன் கேமரா வாயிலாக பக்கத்தில் யானைக் கூட்டம் இருக்கிறதா என்பதை தேடிப்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே சில கிலோமீட்டர் துாரத்திலேயே ஒரு யானைக்கூட்டம் இருப்பதை வனத்துறையினர் ட்ரோன் கேமரா வாயிலாக கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அந்த யானைக் கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி வனத்துறையினர் குட்டி யானையை அழைத்துச் சென்று சேர்த்தனர். குட்டியானை பிரிந்து சில மணி நேரங்களிலேயே அதை தாய் யானையோடு வனத்துறையினர் சேர்த்து வைத்தது சவாலான விஷயம் ஆகும். குட்டியை பார்த்ததும் தாய் யானை அதை தன்னோடு சேர்த்துக் கொண்ட மனதை உருக்கும் காட்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.