கார், டூவீலர், வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பறிமுதல் | Hunting wild animals
நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் இரவு நேரங்களில் மர்ம கும்பல் வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வேட்டை கும்பலை கைது செய்ய வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனக்குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. இதில் வண்டிச்சோலை சரவணமலை அருகே வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகளுடன் திரிந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். விசாரிக்கையில் கோடமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ், ஜீவரத்தினம் மற்றும் ஜீவக்குமார் என தெரியவந்தது. இவர்களுக்கு ஆர்செடின் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் நாட்டு வெடிகளை சப்ளை செய்தது மற்றும் விற்பனை செய்ய வன விலங்குகளின் இறைச்சிகளை வாங்கியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பிரேம்குமார் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்திய கார், டூவீலர், காட்டு பன்றிக்கு வைக்கும் நாட்டு வெடிகள், காட்டு கோழிக்கு வைக்கும் சுருக்கு வலை, காட்டு பன்றியை சுத்தம் செய்யும் கருவி, கத்தி உள்ளிட்ட பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆனந்தராஜ் என்பவர் குன்னூர் வண்டிச்சோலை ஊராட்சி தி.மு.க. செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.