திறமையை நிரூபித்த கிராமப்புற வீரர்கள் | sports | Kovai
கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் யங் இந்தியன்ஸ் கேலோ கபடி போட்டி நடைபெற்றது. கிராமங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் கல்வி நிறுவனங்கள், கிராமப்புற அணிகள் என ஆண்கள் பிரிவில் 51 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 13 அணிகள் பங்கேற்றன. ஆண்களுக்கு நாக் அவுட் முறையில் நடந்த போட்டியின் இறுதிச்சுற்றில் புலியகுளம் பி.ஜே. பிரதர்ஸ் அணி 36-28 என்ற புள்ளி கணக்கில் அரசூர் கே.பி.ஆர். கல்லுாரி அணியை வென்று முதல் பரிசை தட்டி சென்றது. மூன்றாம் பரிசு தேக்கம்பட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும், நான்காம் பரிசு கண்ணார்பாளையம் ஜூனியர் விவேகானந்தா அணிக்கும் வழங்கப்பட்டது. பெண்கள் பிரிவில் மதுரை சிவா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 25-20 என்ற புள்ளி கணக்கில் பாரதியார் பல்கலை அணியை வென்று முதல் பரிசை தட்டி சென்றது. மூன்றாம் பரிசு பயனீர் கல்லுாரி அணியும், நான்காம் பரிசு சங்கரா கல்வி நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டது. இரு பிரிவு அணிகளுக்கும் முதல் பரிசாக 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக 7,000 மற்றும் மூன்று மற்றும் நான்காம் இடம் பிடித்த அணிகளுக்கு 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு குமரகுரு நிறுவன தலைவர் சங்கர் வாணவராயர் பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.