வெடிகுண்டு அதிர்வுகளால் ஆட்டம் கண்ட தொட்டிப்பாலம் | Usilampatti | recorded the vibrations
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியின் நீராதார திட்டமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக வைகை அணையில் இருந்து உத்தப்பநாயக்கனூர் வரை 27 கிலோ மீட்டர் துாரத்துக்கு தொட்டிப்பாலம் கட்டப்பட்டுள்ளது. சந்தையூர், ரெங்கப்பநாயக்கன்பட்டி பகுதிகளில் 18 மீட்டர் உயரத்தில் தொட்டிப்பாலம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. சந்தையூரில் வழியாக செல்லும் தொட்டிப்பாலம் அருகே 1.58 ஹெக்டேர் பரப்பளவில் கல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குவாரியில் கடினமான பாறைகளை தகர்ப்பதற்காக சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் மற்றும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல கிலோ மீட்டர் துாரம் வரை அதிர்வுகள் ஏற்படுகிறது. குவாரிக்கு அருகே தொட்டிப்பாலம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே குவாரிக்கு தடை விதிக்கக்கோரி விருவீடு மற்றும் உசிலம்பட்டி பாசன விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து குவாரி செயல்பட தடை விதிக்கப்பட்டது. குவாரி கான்ட்ராக்டர் வெடி வெடிப்பதால் தொட்டிப்பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என ஐகோர்ட் மதுரை கிளையில் முறையிட்டார். ஐகோர்ட் உத்தரவுப்படி சென்னை அண்ணா பல்கலை புவியியல் மற்றும் சுரங்கத்துறைத் தலைவர் பாலமாதேஸ்வரன், துணைப்பேராசிரியர் குமார் தலைமையிலான குழுவினர் குவாரி பகுதியில் பல்வேறு இடங்களில் வெடிமருந்துகளை பயன்படுத்தி வெடித்து சோதனை செய்தனர். வெடிமருந்து வெடிக்கும் போது ஏற்படும் அதிர்வுகளை பதிவு செய்தனர். சோதனை முடிந்த பின் அறிக்கையை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என குழுவினர் தெரிவித்தனர். மதுரை நீர்வளத்துறை செயற்பொறியாளர் நிறைமதி, உதவிப்பொறியாளர்கள் பாண்டியன், ஏர்னஸ்டோ உடனிருந்தனர்.