இறந்தும் வாழும் மனிதநேயம் | Female organ donation | Tripur
திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் தனபாண்டி. தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுடர்க்கொடி வயது 36. தம்பதிக்கு சின்னதங்கம், அட்சயாநிதி என இரு மகள்கள். மூத்த மகள் கல்லுாரி முதலாம் ஆண்டு, இளைய மகள் பிளஸ் 2 படிக்கிறார். கடந்த, 21ம் தேதி கணவரின் தள்ளுவண்டி கடைக்கு வந்து விட்டு சுடர்க்கொடி மகள்களும் டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். வஞ்சிநகர் அருகே சுடர்க்கொடியின் கண்ணில் பூச்சி விழுந்துள்ளது. இதனால், நிலைகுலைந்த அவர் வாகனத்தை நிறுத்த முடியாமல் தடுமாறி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த மூவரும் அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் சுடர்க்கொடிக்கு தலையில் ரத்தக்கசிவு காரணமாக மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் சுடர்கொடியின் உடல் உறுப்புகளை மற்றொரு உயிரை காப்பாற்ற தானமாக வழங்க கணவர் மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர். இதற்காக, திருப்பூர் அரசு ஆஸ்பிடலில் முதன்முறையாக உடல் உறுப்பு தானம் என்பதால், RMO கோபாலகிருஷ்ணன், மூத்த டாக்டர்கள் சிவக்குமார், ரவி, அகிலா, சக்தி அகிலாண்டேஸ்வரி மற்றும் மயக்கவியல் துறை தலைவர் பூங்குழலி தலைமையில் 15 பேர் கொண்ட டாக்டர் குழு அமைக்கப்பட்டது. வியாழன் அதிகாலை 4 மணிக்கு துவங்கிய அறுவை சிகிச்சை ஐந்து மணி நேரம் நடந்தது. சுடர்க்கொடியின் உடலில் இருந்து கண்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரலை எடுத்து கோவை தனியார் ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். சுடர்கொடி உடலுக்கு அரசு மருத்துவக் கல்லுாரி டீன் முருகேசன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மகள்கள், கணவர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினருக்கு டாக்டர்கள் நன்றி தெரிவித்து, ஆறுதல் கூறினர். சுடர்க்கொடியினர் உறவினர்கள் கூறுகையில், நான்கு ஆண்டு முன் சுடர்க்கொடியின் மூளையில் நீர் கோர்த்ததால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைத்தார். சிரமத்துடன் இருந்து உயிர் பிழைத்து மீண்டு வந்ததால் உடல் உறுப்புகளின் சிரமம் அவருக்கு தெரியும். வலியை உணர்ந்தவர். எனவே தான் அவரின் ஆத்மா சாந்தி பெற உடல் உறுப்பு தானம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டோம் என்றனர். சுடர்க்கொடி தானமாக வழங்கிய கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியன மருத்துவ பாதுகாப்புடன் கோவை கோவை அவிநாசி ரோட்டிலுள்ள தனியார் ஆஸ்பிடலுக்கு ஆம்புலன்சில் 45 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் உடனே உறுப்புகளை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தினர். அதேபோல கண்கள் கோவையிலுள்ள அகர்வால் ஐ ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. திருப்பூரில் இருந்து ஆம்புலன்ஸ் முன் இரு போலீஸ் வாகனங்கள் சைரனுடன் செல்ல 50 கி.மீ., துாரத்தை 45 நிமிடத்தில் கடந்து சென்று ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.