அமைச்சர் வழங்கிய நன்கொடையை திருப்பி அனுப்பிய கோயில் நிர்வாகம்
அமைச்சர் வழங்கிய நன்கொடையை திருப்பி அனுப்பிய கோயில் நிர்வாகம் | Minister Mahesh refused to come to the temple தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலராகவும் உள்ளார். இவரது தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மருங்காபுரி அருகே டி.இடையப்பட்டி முருகன் கோயிலில் கடந்த ஜூன் 12ல் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு கிராம மக்கள் மற்றும் திமுகவினர் அமைச்சர் மகேஷுக்கு அழைப்பு விடுத்தனர். அவரும் கண்டிப்பாக வருவேன் என்றார். ஆனால் ஒப்புக் கொண்டபடி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. 10,000 ரூபாயை கோயிலுக்கு நன்கொடை வழங்கினார். இன்னொரு நாளில் கட்டாயம் வருவேன் என சாக்கு சொன்னார். இந்நிலையில் ஜூலை 28ல் மருங்காபுரியில் அமைச்சர் மகேஷ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவாக இருந்தது. அப்போது டி.இடையப்பட்டி முருகன் கோயிலுக்கு வருவார் என மருங்காபுரி யூனியன் சேர்மன்பழனியாண்டியிடம் அமைச்சர் தரப்பில் கூறியுள்ளனர். இதையடுத்து பூரண கும்பம், ஆளுயர மாலை, பூஜை செய்த பிரசாதம், பொன்னாடைகளோடு அமைச்சர் வருகைக்காக தி.மு.க.,வினரும், கிராமத்தினரும் ஆவலோடு கோயில் முன் கூடினார். அமைச்சர் மகேஷ் இரவு 9 மணி வரை கோயிலுக்கு வரவில்லை. இதனால் கோபம் அடைந்த கிராமத்தினர், தங்களையும், கோயிலையும் அமைச்சர் மகேஷ் அவமதித்து விட்டதாக கொந்தளித்தனர். அமைச்சருக்காக வாங்கி வைத்திருந்த மாலை, பிரசாதம், பொன்னாடைகள் உள்ளிட்டவைகளோடு அமைச்சர் கோயிலுக்குக் கொடுத்த நன்கொடை 10,000 ரூபாயுடன் கூடுதலாக 100 ரூபாய் சேர்த்து 1,100 ரூபாயை அமைச்சரிடமே கொடுத்து விடுங்கள் என கூறி யூனியன் சேர்மன் பழனியாண்டியிடம் அனைத்தையும் கொடுத்து விட்டனர். பதற்றம் அடைந்த அமைச்சர் ஆதரவாளர்கள் டி.இடையப்பட்டி கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.