மெடிக்கல் ஒனர் கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது | Trichy | Medical Owner Kidnapping
திருச்சி மாவட்டம் மணப்பாறை பொய்கைப்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகர். வீரப்பூரில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். சுதாகர், அவரது மனைவி ஐஸ்வர்யா மெடிக்கல் ஷாப்பில் இருந்தபோது டிப்டாப் ஆசாமிகள் 5 பேர் காரில் வந்து இறங்கினர். தாங்கள் வருமான வரி அதிகாரிகள் எனக்கூறி கடையில் சோதனை செய்தனர். விசாரணை செய்ய வேண்டும் என கூறி சுதாகரை காரில் அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் சுதாகரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தாங்கள் சுகாதாரத்துறை அதிகாரி என கூறி 20 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றனர். இறுதியாக 10 லட்சம் ரூபாய் கேட்டனர். முதலில் வருமானவரி அதிகாரிகள் என கூறியவர்கள் பி்ன்னர் சுகாதார அதிகாரிகள் என கூறியதால் ஐஸ்வர்யாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து எஸ்பி வருண்குமாரிடம் புகார் கூறினார். மணப்பாறை டிஎஸ்பி மரியமுத்து, இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், வீரமணி, செந்தில்குமார் ஆகியோர் மஞ்சம்பட்டி அருகே கடத்தல்காரர்களை மடக்கினர். விசாரணையில் கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் நெடுமங்காடு நவ்ஷாத், உப்பிலியபுரம் சேகர், வலையபட்டி சுதாகர், மதுரை கோசாகுளம் மாரிமுத்து, சென்னை ஆவடி வினோத், கங்காதரன் மற்றும் தொப்பம்பட்டி கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் துறையூரில் டிப்டாப் ஆசாமிகள் இருவர் ஒரு வீட்டில் வருமானவரி அதிகாரிகள் எனக்கூறி 5 லட்சத்து 18,000 ரொக்கம் மற்றும் 5 பவுன் நகையை எடுத்துச் சென்றனர். இவ்வழக்கில் தொப்பம்பட்டி சக்திவேல் மற்றும் திருவிடைமருதூரை மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய், 5 பவுன், கார், டூவீலர் மற்றும் 8 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டன. இக்கும்பல் மீது மீது ஏற்கனவே கோவை, கடலூர், திருப்பூர், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல், அரசு அதிகாரிகள் என மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.