செங்கோட்டை அருகே சுற்றிய வங்கதேச இளைஞர்கள்: அதிர்ச்சி தகவல் 5 illegal Bangladeshi Youth arrested
ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 79 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார். இதற்காக டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதால், செங்கோட்டைக்குள் சென்று மக்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி செங்கோட்டையில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கோட்டை வளாகத்திற்குள் 5 இளைஞர்கள் நுழைய முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். டில்லி சிறப்பு போலீசார் நடத்திய விசாரணையில் ஐந்து இளைஞர்களும் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள்; 20 முதல் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரியவந்தது. எதற்காக செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்தார்கள் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். செங்கோட்டையை சுற்றிப்பார்க்க வந்தோம்; பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என எங்களுக்கு தெரியாது: தெரியாமல் வந்து விட்டோம் விட்டு விடுங்கள் என இளைஞர்கள் கூறினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் டில்லியில் வேலை பார்ப்பதற்காக 3 மாதங்களுக்கு முன் அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியது தெரிய வந்தது. ஆனால், இந்தியாவுக்கு வருவதற்கான எந்த ஆவணங்களும் இல்லை. அவர்களிடம் இருந்து வங்கதேச நாட்டு ஆவணங்கள் சிலவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அனைவரும் சட்டவிரோதமாக டில்லியில் வசித்து வந்தது உறுதியானதை தொடர்ந்து, என்ஐஏ அதிகாரிகளும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பயங்கரவாத பின்னணி உள்ளதா? என விசாரைணை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியதை தவிர, அவர்களின் செயல்பாடுகளில் வேறெந்த சந்தேகமும் வரவில்லை. சந்தேகத்துக்குரிய பொருட்களும் அவர்களிடம் இல்லை என தெரிய வந்ததாக டில்லி போலீசார் கூறினர். அதைத் தொடர்நது, அவர்களை மீண்டும் வங்கதேசத்துக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் துவங்கியுள்ளனர் என போலீசார் கூறினர். டில்லி சாணக்யபுரியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழக எம்பி சுதாவிடம் இருந்து நான்கரை சவரன் தங்கச்செயினை பைக்கில் வந்த மர்ம ஆசாமி அறுத்துச் சென்ற சம்பவத்தால் உண்டான அதிர்ச்சி அடங்குவதற்குள், வங்கதேச இளைஞர்கள் பிடிபட்டிருப்பது பரபரப்பை கூட்டியுள்ளது. டில்லியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை இந்த சம்பவங்கள் காட்டுவதாக மத்திய, மாநில அரசுகளை எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.