தமிழ் அகதிகளுக்கு அனுமதி: பிரதமர் மோடிக்கு புகழாரம் admk edappadi palanisami Sri Lankan Tamils ref
ஜனவரி 9, 2015க்கு முன் இந்தியாவுக்கு வந்த இலங்கை தமிழ் அகதிகள், உரிய பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டாலும்கூட அவர்களுக்கு இந்திய தண்டனை சட்ட விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்திய குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டப்படி, பாஸ்போர்ட் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைந்து தங்கியிருந்தால், அவர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது ஐந்து ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். ஆனால், 2015 ஜனவரி 9ம்தேதிக்குள் இந்தியா வந்த இலங்கை தமிழ் அகதிகள் அந்த சட்டத்தின் வரம்புக்குள் வரமாட்டார்கள். அரசாங்கத்தில் பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழர்கள் ஆவணம் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்ததாக கருதப்பட மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 9.1.2015-க்கு முன் இலங்கை நாட்டில் இருந்து இந்தியாவிற்கு குடியேறி, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கை தமிழர்களை சட்டப்பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நம் தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள், போர்ச்சூழல், பொருளாதார நெருக்கடிகள், திமுக- காங்கிரஸ் கூட்டணியின் மன்னிக்க முடியாத துரோகத்தால் நடந்த இனப்படுகொலை ஆகியவற்றின் வடுகளைச் சுமந்து, தமிழகத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கான உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பது அதிமுகவின் நீண்டகால கோரிக்கை. எனது அறிவுறுத்தலின்படி, இலங்கைத் தமிழர்களுக்கான அங்கீகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் அதிமுக உறுப்பினர்கள் கோரி வந்தனர். இலங்கைத் தமிழர்களுக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தின் முதல் படியாக உள்ள இந்த அறிவிப்பினை அதிமுக மிகுந்த மனமகிழ்வோடு வரவேற்கிறது. இதனை சாத்தியப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அதிமுக சார்பிலும், தமிழக மக்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனிதம் தழைத்தோங்கட்டும்! என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #ADMK #EdappadiPalanisami #SriLankanTamils #Refugees #ImmigrationAndForeignersAct2025 #CulturalIdentity #IndianPolitics #RefugeeCrisis #HumanRights #Migration #TamilCommunity #TamilRefugees #PoliticalDebate #LegalReforms #SocialJustice #TamilNadu #Activism #PolicyChange #InternationalRelations