உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குற்ற உணர்ச்சி தாங்காமல் போலீசில் சரணடைந்த தந்தை

குற்ற உணர்ச்சி தாங்காமல் போலீசில் சரணடைந்த தந்தை

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் துபகுலா ராம ஆஞ்சநேயலு. டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 4 மகள்கள். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. 4வது மகள் பாரதி வயது 19. கடைசி மகள் என்பதால் வீட்டில் அதிக செல்லமாக வளர்த்தனர். கர்னூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். செல்ல மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க விரும்பினார். ஆனால் ஆஞ்சநேயலுவின் கனவுக்கு நேர்மாறாக பாரதி நடந்தார். தான் ஒரு இளைஞனை காதலிப்பதாகவும், அவனையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தந்தையிடம் கூறினார். மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ஆஞ்சநேயலு. காரணம் அந்த இளைஞன் வேறு சமூகத்தை சேர்ந்தவர். இதனால் ஆஞ்சநேயலுவுக்கு பிடிக்கவில்லை. மகளிடம், அந்த இளைஞனை மறந்துவிடு, வேறு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என கூறினார். ஆனால் பாரதியின் செவிகளில், தந்தையின் அறிவுரைகள் விழவில்லை. காதலனை திருமணம் செய்வதில் விடாப்பிடியாக இருந்தார். மகளின் பிடிவாதம் ஆஞ்சநேயலுவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மகளின் காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால், குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என நினைத்தார். கடந்த 1ம் தேதி இதுதொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. கவுரவத்துக்காக மகளையே கொல்ல ஆஞ்சநேயலு துணிந்தார். பாரதியை காசாபுரத்தின் புறநகரில் உள்ள திக்கசாமி கோயிலுக்கு பைக்கில் அழைத்து சென்றார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பெற்ற மகள் என்றும் பாராமல் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்தார். பிறகு, அடர்ந்த வனப்பகுதியில் மகளின் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தார். பிறகு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்தவர்களிடம் விஷயத்தை கூறினார். அவர்கள் கதறி அழுதாலும், வெளியே இதுபற்றி யாரிடமும் சொல்லவில்லை. பாரதியின் நடமாட்டம் இல்லாததை கண்டு அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதற்கிடையே மகளை கொன்ற குற்ற உணர்ச்சி தாங்காமல் போலீஸ் நிலையத்தில் ஆஞ்சநேயலுவே சரண் அடைந்தார். போலீசாரிடம் நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் சொன்னார் ஆஞ்நேயலு. அவர் சொன்ன இடத்துக்கு டாக்டர்கள் குழுவினருடன் போலீசார் சென்றனர். அங்கு வைத்தே பிரேத பரிசோதனை செய்தனர். ஆஞ்சநேயலுவை கைது செய்த போலீசார், இந்த கொலையில் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரிக்கின்றனர். கவுரவத்துக்காக பெற்ற மகளையை கொன்று எரித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி