பாதிக்கப்பட்ட மாணவியிடம் ரகசிய விசாரணை! | Anna University | Investigation Team | High Court
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் டிசம்பர் 23ம் தேதி இரவு 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் நிறைய மர்ம முடிச்சுகள் இருப்பதாகவும், முக்கிய புள்ளியை காப்பாற்றும் முயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய எஸ்ஐடி எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இக்குழுவினர் சம்பவ இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். அந்த இடம் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கும் சென்றனர். விசாரணைக்கு சம்மதமா என அவரின் ஒப்புதலுடன் ரகசிய விசாரணை நடத்தினர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்த அனைத்து விபரங்களையும் மாணவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கைதான ஞானசேகரனிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்த தகவல்களையும் ஆய்வு செய்தனர். வாட்சப் சாட்டிங், மொபைல் போனில் இருந்த எண்கள், போட்டோ மற்றும் வீடியோ என அனைத்து விபரங்களும் சேகரிக்கப்பட்டது. அடுத்தகட்டமாக சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன் விசாரணை தொடர்கிறது.