புதிய உத்வேகத்துடன் அண்ணாமலையை களமிறக்கும் தேசிய தலைமை! Annamalai | Tamilnadu BJP | 2026 Election
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஏழு மாதங்களே இருப்பதால், தி.மு.க. அரசின் மீதான குற்றச்சாட்டுகளை மக்களிடம் தெரிவிப்பதுடன், மத்திய அரசின் திட்டங்களை பொது வெளியில் சேர்க்கும் பணியில், அண்ணாமலையை கட்சி மேலிடம் ஈடுபடுத்த உள்ளது.
இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மட்டுமே, இண்டி கூட்டணி பலமாக இருந்தது. அதற்கு ஏற்ப தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள், 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
மத்தியில் பா.ஜ.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனதற்கு, தி.மு.க.வுக்கு முக்கிய பங்கு உள்ளது.
அதற்கு பா.ஜ. கூட்டணியில் இருந்து, அ.தி.மு.க. பிரிந்து சென்றதே முக்கிய காரணமாக பா.ஜ. தலைமையால் பார்க்கப்படுகிறது. கூட்டணி முறிவுக்கு, அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலையே காரணம் என, அவர் மீது அ.தி.மு.க பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டினார்.
இருந்தாலும் அது குறித்து கவலைப்படாத அண்ணாமலை, தமிழகத்தில் பா.ஜ. தலைமையில் ஒரு கூட்டணியை கட்டமைத்து, லோக்சபா தேர்தலை சந்தித்தார். அந்த கூட்டணி எப்படியும் பத்து தொகுதிகளிலாவது நிச்சயம் வெற்றி பெறும் என, தேசிய தலைமைக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்.
ஆனால் பா.ஜ. கூட்டணி 18.4 சதவீத ஓட்டுகளை பெற்றாலும், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. இது அண்ணாமலை மீது தேசிய தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்தாண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், லோக்சபா தேர்தலுக்காக தமிழக பா.ஜ. அமைத்த கூட்டணி போதாது என கட்சியின் தேசிய தலைமை முடிவெடுத்தது.
இதற்காக மீண்டும் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமியை, பா.ஜ. தரப்பில் அணுகினர். அப்போது, அண்ணாமலை தலைவராக இல்லாத பா.ஜ.வுடன் கூட்டணி அமைக்கலாம் என பழனிசாமி தரப்பில் தெரிவித்தனர்.