லேசர் வைத்தே கதையை முடிக்கும் மிரட்டல் ஆயுதம் | BSF | D4 anti-drone system | Pantsir-S1
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் BSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படை தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முந்தைய காலங்களில் சுரங்க பாதை, குழாய்கள் வழியாக பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தப்பட்டது. 2019க்கு பிறகு பயங்கரவாதிகள் ட்ரோன்கள் மூலம் ஆயுதம், போதைபொருட்களை கடத்துகின்றனர். 2024ல் மட்டும் அக்டோபர் 10 வரையில் 200 பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ட்ரோன்களை சுட்டு வீழ்த்த உள்நாட்டு தொழில்நுட்பத்தில் D4 என்கிற ட்ரோன் தடுப்பு சாதனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் அதிநவீன சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்திய எல்லைக்குள் நுழையும் ட்ரோன்களை 3 கிலோமீட்டருக்கு முன்னதாகவே டி4 சாதனம் செயல் இழக்க செய்யும். அதி நவீன லேசர் கதிர்கள் மூலம் எதிரி ட்ரோன்கள் தாக்கப்பட்டு தரையில் வீழ்த்தப்படும். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட டி4 ட்ரோன் தடுப்பு சாதனத்தை பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்போது சோதனை அடிப்படையில் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் எல்லை பகுதிகள் முழுவதும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் டி4 சாதனத்தை போலவே ரஷ்ய ராணுவத்தில் Pantsir-S1 ட்ரோன் ஏவுகணை தடுப்பு சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த ரஷ்ய அதிபர் புடின் மாளிகை உட்பட முக்கிய பகுதிகளில் பான்டிர் எஸ்1 ட்ரோன் தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.