கலெக்டர் ஆபீசில் ராணுவ வீரர் தர்ணா: போலீசுடன் தள்ளு முள்ளு | Army man protest | Collector office |
அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். செப்டம்பர் 20ல் இவரது வீட்டு சுவர் கட்ட முயன்றபோது ஏற்பட்ட தகராறில், சித்தப்பா மகன்களான ஜெயங்கொண்டம் எஸ்.பி ஆபீசில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் சரண்ராஜ், அவரது தம்பி சத்தியமூர்த்தி இருவரும் ரஞ்சித்குமாரின் தந்தை, தம்பி, தங்கையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் ரஞ்சித் குமாரின் தந்தை புகார் அளித்துள்ளார். நடவடிக்கை எதுவும் எடுக்காததால் எஸ்பி உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள், கலெக்டர் ஆகியோரிடம் அடுத்தடுத்து ரஞ்சித்குமார் நேரடியாக மனு அளித்துள்ளார். 2 மாதங்களாக அலைந்தும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திங்களன்று ராணுவ உடையில் வந்த ராணுவ வீரர் ரஞ்சித்குமார், அரியலூர் கலெக்டர் ஆபீஸ் முன் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்காத ராணுவ வீரர், கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை சொல்ல வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தார்.