அதானி கைதாகிறார்? அமெரிக்க விவகாரத்தின் பின்னணி | Arrest warrant Adani | Adani vs US court | Adani i
அதானிக்கு கைது வாரண்ட் அமெரிக்க கோர்ட் உத்தரவு பின்னணி என்ன? உலக பணக்காரர்களில் ஒருவரான இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்க அரசு கூறி இருப்பது இந்தியாவில் புயலை கிளப்பி உள்ளது. 62 வயதான கவுதம் அதானி குஜராத்தை சேர்ந்தவர். அதானி குழும நிறுவன தலைவராக இருக்கிறார். துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள அதானி, உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். அவர் மீது SEC எனப்படும் அமெரிக்க அரசின் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் அமெரிக்க நீதி துறை சேர்ந்து கிழக்கு நியூயார்க் கோர்ட்டில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெற்ற சோலார் மின் உற்பத்தி ஒப்பந்தங்களில், அமெரிக்கர்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியதாக கவுதம் அதானி மீது புகார் தெரிவித்தன. அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 2,200 கோடி ரூபாயை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்க ஒப்புக்கொண்டனர் என்றும், இதன் மூலம் 20 ஆண்டுகளில் 16,888 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் ஒப்பந்தத்தை அவர்கள் பெற முடியும் என்றும் அமெரிக்க அரசு நிறுவனங்கள் கூறின. அமெரிக்க பங்கு சந்தை மூலம் கடைசி 5 ஆண்டில் பல ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கர்கள் முதலீடு செய்து ஏமாந்து விட்டனர் என்றும் குற்றம் சாட்டின.