எச்சரிக்கை மீறி ஆடிய பஞ்சாப்: பாடம் புகட்டியது இயற்கை | BBMB | Bhakra Beas Management Board
பஞ்சாப் மறுசீரமைப்பு சட்டம் 1966ன் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பு BBMB எனப்படும் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம். இங்கே தமிழகம், கர்நாடக இடையே காவிரி மேலாண்மை வாரியம் இருப்பது போல பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல் மாநிலங்களில் நீர் வளங்களை நிர்வகிக்கிறது. பக்ரா அணை மற்றும் பாங் அணை போன்ற முக்கிய அணைகளின் செயல்பாடுகள், பராமரிப்பை இந்த வாரியம் மேற்பார்வை செய்கிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அணையில் இருந்து தரப்பட வேண்டிய நீர் பங்கீடை முடிவு செய்கிறது. இதில் பஞ்சாப் அதிக பங்கு பெறுகிறது. இந்த நிலையில் ஹரியானாவில் கடந்த ஏப்ரல் மாதம் வறண்ட வானிலை நிலவியது. அதனால் அம்மாநில அரசு குடிநீர் தேவைக்காக கூடுதலாக 4,500 கனஅடி நீர் கேட்டது. இந்த கோரிக்கையை பஞ்சாப் அரசு கடுமையாக எதிர்த்தது. ஹரியானாவுக்கு தண்ணீர் தரப்போவதில்லை என உறுதியாக சொன்னது. அதே சமயம் அணை பாதுகாப்பை உறுதி செய்ய பருவமழைக்கு முன் அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் என பக்ரா பியாஸ் ஆணையம் சொன்னது. ரூல் கர்வ் (rule curve) எனப்படும் தொழில்நுட்ப விதிபடி, எதிர்காலத்தில் வரக்கூடிய கனமழையை சேமிக்க முன்பே நீர்மட்டத்தை குறைப்பார்கள். ஹரியானாவும் வறட்சி என தண்ணீர் கேட்டதால் பஞ்சாப் அரசு தாராளமாக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடலாம் என பரிந்துரை செய்தது. இந்த முடிவு இரு மாநிலங்களுக்கு இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மே 8ம் தேதி பியாஸ் அணையின் கதவுகளைப் பூட்டினர். பக்ரா பியாஸ் ஆணைய தலைவர் மனோஜ் திரிபாதியை ஒரு விருந்தினர் மாளிகையில் பூட்டி வைத்தனர். ஹரியானாவுக்கு தண்ணீர் வழங்கும் நடவடிக்கையை தடுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட்டுக்கு போனது. ஐகோர்ட்டும் பக்ரா பியாஸ் ஆணையத்தின் முடிவு சரி என சொன்னது. பஞ்சாப்பில் அதிகப்படியான பருவமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தொடங்கலாம். பஞ்சாப் அரசு ஹரியானாவுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. பக்ரா பியாஸ் ஆணையத்தின் நடவடிக்கை பேரழிவை தடுக்கும் என ஐகோர்ட் உறுதி செய்தது. அப்போது பஞ்சாப் முரண்டு பிடித்த நிலையில் ஐந்தே மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் பஞ்சாப் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 1,400க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் அபாயகட்டத்தை தாண்டி உயர்ந்துள்ளது. உபரி நீர் அப்படியே ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்கு முன் நாங்கள் தண்ணீர் கேட்டோம் பஞ்சாப் தரவில்லை. இப்போது ஹரியானாவின் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. அதனால் அணைகளில் நீர் திறப்பை குறைக்க வேண்டும் என அம்மாநில அரசு கூறியுள்ளது. பக்ரா பியாஸ் ஆணையத்திடம் தங்களுக்கு விநியோகம் செய்யப்படும் நீரில் 2,500 கன அடி குறைக்குமாறு வலியுறுத்தியது. இது பஞ்சாப் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. எங்களிடம் தண்ணீர் இல்லாத போது ஹரியானா அரசு கூடுதல் தண்ணீர் கேட்டது. இப்போது பஞ்சாப் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நேரத்தில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டாம் என்கிறது. இந்த முரண்பாடுகளை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என ஆம் ஆத்மி மூத்த நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஐந்து மாதங்களுக்கு முன் அணையை திறக்க மாட்டோம் என கதவை மூடி போராடியவர்கள், இன்று அணையை திறக்காமல் விட்டால் ஆபத்து என்று சொல்லும் நிலைக்கு மாற்றியுள்ளது இயற்கை. #PunjabHaryanaWaterDispute #BhakraBeasManagementBoard #BBMB #WaterDispute #SutlejYamunaLink #SYL #PunjabFloods #Haryana #WaterSharing #ClimateChangeImpact #BhagwantMann #HydroPolitics #WaterCrisis #IndiaWater #WaterSecurity