காலனித்துவ அடையாளத்தை மாற்ற மத்திய அரசு முடிவு govt renames port blair| sri vijaya puram
அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேயர். இதன் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளின் நுழைவு பகுதியாக போர்ட் பிளேயர் இருக்கிறது. பிரிட்டிஷ் காலனித்துவ கடற்படை அதிகாரி கேப்டன் ஆர்க்கிபால்ட் பிளேயரின் நினைவாக இந்த பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயர் மாற்றப்பட உள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் ஈர்க்கப்பட்டு, காலனித்துவ ஆதிக்கத்தின் அடையாளமாக இருக்கும் போர்ட் பிளேயர் பெயரை மாற்றி ஸ்ரீ விஜயபுரம் பெயர் சூட்டப்படுகிறது. இது நமது சுதந்திர போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் நிகோபார் தீவுகளின் தனித்துவமான பங்களிப்பையும் குறிக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்திலும், வரலாற்றிலும் அந்தமான் தீவுகள் ஈடுஇணையற்ற பங்கு உள்ளது. சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய இந்த தீவு இன்று வளர்ச்சிக்கான முக்கிய இடமாகவும் உள்ளது என அமித்ஷா சுட்டிக்காட்டியுள்ளார். சுபாஷ் சந்திர போஸ் நமது நாட்டின் முதல் தேசிய கொடியை ஏற்றிய இடமும், வீர் சாவர்க்கர் மற்றும் பிற சுதந்திர போராளிகள் அடைக்கப்பட்ட செல்லுலார் சிறையும் இங்கே இருக்கிறது என அமித்ஷா கூறியுள்ளார்.