வெடித்த டயர்... 12,000 லிட்டர் பெட்ரோல், டீசலுடன் லாரி கவிழ்ந்த அதிர்ச்சி | chennai oil tanker truck
சென்னை எண்ணூரில் இருந்து 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 8 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று குன்றத்தூர் அடுத்த காட்டரம்பாக்கம் பகுதி பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தது. லாரியை 30 வயதான டிரைவர் சூர்யா ஓட்டினார். சிறுகளத்தூர் அருகே சென்றபோது திடீரென லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி அப்படியே சாலையின் குறுக்கே தலைக்குப்புற கவிழ்ந்தது. டேங்கரில் இருந்த பெட்ரோல், டீசல் குபுகுபுவென வெளியேறி, ஆறு போல் ரோட்டில் பாய்ந்து. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பயத்தில் பதறியடித்து ஓடினர். சிலர் காயம் அடைந்த டிரைவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க பெட்ரோல், டீசல் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.