உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆசிரியைக்கு நடந்தது என்ன? கோவை மக்கள் கடும் அதிர்ச்சி | Coimbatore Teacher | Madukkarai police

ஆசிரியைக்கு நடந்தது என்ன? கோவை மக்கள் கடும் அதிர்ச்சி | Coimbatore Teacher | Madukkarai police

பள்ளிக்கு புறப்பட்ட ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு கோவையில் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வைரல் கோவை, மதுக்கரையைச் சேர்ந்தவர் பத்மா (53). வழுக்குப்பாறை அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் இறந்து விட்டார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று காலை 11 மணிக்கு ஸ்கூட்டரில் வழுக்குபாறை பள்ளிக்கு புறப்பட்டார். ஆனால், பள்ளிக்கு போய்ச்சேரவில்லை. பள்ளியில் இருந்து போன் வந்ததும் பிள்ளைகள் பதறிப் போனார்கள். உடனடியாக மதுக்கரை போலீசில் மகனும், மகளும் புகார் அளித்தனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்து தேடத் துவங்கினர். இதனிடையே, இன்று காலை மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அருகில் ஸ்கூட்டர் கிடந்தது. அதை வைத்து பத்மாதான் என்ற முடிவுக்கு போலீசார் வந்தனர். பத்மாவின் உடலை பிள்ளைகளும் அடையாளம் காட்டி விட்டு கதறி அழுதனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பத்மாவின் மகள் வழக்கறிஞராக இருக்கிறார். அதுமட்டுமின்றி குடும்பத்திலும் சில பிரச்னைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனால் கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். பிறகு அவர் கூறியதாவது: பத்மாவுக்கு பல பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் விசாரணை முடிவில் தான் உண்மை தெரியவரும் என்றார். வீடு இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில்தான் பத்மாவின் உடல் எரிந்த நிலையில் கிடந்திருக்கிறது. வீட்டில் இருந்து பள்ளிக்கு பத்மா செலலும் சிசிடிவி வீடியோவையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வீட்டுக்கும் குப்பை கிடங்குக்கும் இடையில்தான் ஏதோ நடந்துள்ளது. யாராவது அவரை வழிமறித்தார்களா? நகைக்காக கொலை செய்து குப்பையில் போட்டு எரித்தார்களா? வேறெங்காவது கொல்லப்பட்டார் என்றால், மர்ம ஆசாமிகள் அவரை கடத்திச் சென்றார்களா? என பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனால், ஆசிரியை பத்மா பிணமாக கிடந்த இடத்தின் அருகே வசிக்கும் மக்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எதாவது தடயம் கிடைக்காதா? என போலீசாரும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் தீவிரமாக ஆராய்கின்றனர். பத்மாவிடம் கடைசியாக யார் யாரெல்லாம் செல்போனில் பேசினார்கள்? எந்த இடத்தில் அவர் போன் ஆக்டிவாக இருந்தது என்பன போன்ற விவரங்களையும் வல்லுநர்களின் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்குஎதிரான பாலியல் குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக நடந்து வரும் நிலையில், ஆசிரியை மர்மமான முறையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த சம்பவம் கோவை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் உரிய விசாரணை நடத்தி பத்மா சாவுக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.

மார் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !