கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கை மணக்கும் இளம் எம்பி பிரியா சரோஜ் cricketer Rinku Singh KKR team Pri
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கும் சமாஜ்வாடி இளம் எம்பி பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் லக்னோவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தடபுடலாக நடந்தது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், எம்பி ஜெயா பச்சன், கிரிக்கெட் வாரிய துணைதலைவர் ராஜீவ் சுக்லா, கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோர் வாழ்த்தினர். சமாஜ்வாடி கட்சி எம்பியின் நிச்சயதார்த்தம் என்பதால் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் எல்லாரும் பிரசென்ட் ஆகியிருந்தனர். பிரியாவுக்கு ரிங்கு சிங் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தபோது, உணர்ச்சிப் பெருக்கில் பிரியா கண்கலங்கி விட்டார். கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்துக் கொண்டதும் இருவரும் கரங்களை பற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக போஸ் கொடுத்தனர். பிரியா சரோஜின் அப்பா கெரகட் Kerakat சட்டசபை தொகுதி சமாஜ்வாடி எம்.எல்.ஏ. ஆவார். பிரியா சரோஜ்க்கு 26 வயதாகிறது. 2022ல் உபி. சட்டசபை தேர்தலில் அப்பாவுக்காக சுறுசுறுப்பாக பிரசாரம் செய்தபோது, மக்கள் மத்தியில் பிரியா பிரபலமானார். யார் அந்தப் பொண்ணு; அழகா இருக்கா; நல்லாவும் பேசறாளே... என கேட்க ஆரம்பித்தனர். 2024 பார்லிமென்ட் தேர்தலில் அகிலேஷ் டிக்கெட் கொடுத்தார். மச்லிஷார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பார்லிமென்ட்டுக்குள் அடியெடுத்து வைத்தார். 25 வயதில் எம்பிஆனதன்மூலம் இளம் எம்பிக்களில் ஒருவரானார். அலிகாரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு 28 வயதாகிறது. 2018 முதல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்காக விளையாடி வருகிறார். 2023 ஐபிஎல் போட்டியில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை விளாசி கொல்கத்தா அணிக்கு எதிர்பாராத வெற்றியை தேடித்தந்து ஒரே இரவில் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார். அதே ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பெற்றார். அவர் 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், மற்றும் 33 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில், அவர் 50 போட்டிகளில் விளையாடி 3336 ரன்கள் குவித்துள்ளார், இதில் ஏழு சதங்கள் அடக்கம். ரிங்கு சிங்- பிரியா திருமணம் காதல் கம் அரேன்ஜ்ட் மேரேஜ். ரிங்கு சிங் தொடர்ச்சியாக ஐந்து சிக்சர் அடித்த அதே 2023ல் தான் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். ஐநது சிக்சர்களுக்காக முதலில் பிரியா வாழ்த்து சொன்னார். நட்பு மலர்ந்தது. பிறகு அது காதலாக மாறியது. நிச்சயதார்த்த விழாவில் மோதிரம் அணிவிக்கும் சம்பிரதாயம் நிறைவுற்றதும், இசைக்கப்பட்ட இந்தி பாடலுக்கு எம்பி பிரியா டான்ஸ் ஆடினார். முதலில் தயங்கி நின்ற ரிங்கு சிங்கும் பிறகு பிரியவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடத் துவங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது