மேவாட் கும்பல் வேலையா? ஈரோடு போலீஸ் அலர்ட் | Erode Lodge Gun | Mewat Gang
ஈரோடு லாட்ஜ் ரூமில் துப்பாக்கி அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி! ஈரோடு சத்தி ரோட்டில் லாட்ஜ் இயங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் 25ல் வடமாநில நபர் ஒருவர் ரூம் எடுத்து தங்கி உள்ளார். அவர் ரூமை காலி செய்துவிட்டு சென்ற பிறகு லாட்ஜ் ஊழியர்கள் சுத்தம் செய்ய உள்ளே சென்றனர். அப்போது தலையணைக்கு அடியில் துப்பாக்கி இருந்துள்ளது. அதனுடன் 6 தோட்டாக்களும் கிடைத்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் நிர்வாகம் போலீசுக்கு தகவல் சொன்னது. துப்பாக்கி, தோட்டாக்களை மீட்ட போலீசார் லாட்ஜ்ஜில் விசாரணை நடத்தினர். அறை எடுத்து தங்கிய நபர் சுரேந்திரன், வயது 42 என பதிவேட்டில் எழுதப்பட்டிருந்தது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் முகவரியில் இருந்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பெற்று ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். துப்பாக்கியை விட்டு சென்ற நபர் அதனை தேடி மீண்டும் அறைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. லாட்ஜ் ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். ஆனால் இதுவரை யாரும் துப்பாக்கி, தோட்டாக்களை எடுத்து செல்ல வரவில்லை. இதனால் குற்ற செயலில் ஈடுபட மர்ம நபர் துப்பாக்கியை கொண்டு வந்தது உறுதியாகி உள்ளது.