அடையாளம் காணப்பட்ட குஜராத் மாஜி முதல்வர் விஜய் ரூபானி உடல் | Air india flight crash | Ahmedabad | Ex
ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய ஆமதாபாத் விமான விபத்து நடந்து 4 நாட்களாகியும் இன்னும் அதன் துயரம் மக்கள் மனதை விட்டு நீங்காமல் நீடிக்கிறது. அதற்கு காரணம் அந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரை தவிர அனைவரும் தீக்கிரையானதுதான். அதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். போதாக்குறைக்கு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் ஒரு மெடிக்கல் காலேஜ் ஹாஸ்டல் கட்டடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியதால் உயிர் பலியை மேலும் கூட்டிவிட்டது. ஹாஸ்டலல் உணவு அருந்திக்கொண்டிருந்த மாணவர்கள், மெடிக்கல் காலேஜ் வளாகத்தில் இருந்தவர்கள் என பலரும் விமானத்தின் தீயில் சிக்கியதால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமானப்போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் அடுத்தடுத்து ஆமதாபாத் விரைந்தனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, காயங்களுவடன் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். விபத்தில் பலியான முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி குடும்பத்தினரையும் பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் மேலும் சிலர் இறந்ததால் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 274-ஐ எட்டியது. விமானத்தில் பயணித்த 241 பேர் மட்டுமின்றி 5 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் உள்பட மேலும் 33 பேரும் இந்த விமான விபத்தால் இறந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 270 உடல்கள் ஆமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு இதுவரை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியதால் டி.என்.ஏ சோதனை மூலம் உடல்களை அடையாளம் கண்டு ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. டிஎன்ஏ சோதனை செய்யாமலேயே நேரடியாக உறவினர்கள் அடையாளம் காட்டிய 8 உடல்கள் ஒப்படைக்கப்பட்டு இருந்தன. டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்ட 31 பேரின் உடல்களில் 12 உடல்கள் அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்தது. இந்நிலையில் டிஎன்ஏ பரிசோதனை மூலம் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்துள்ளார். இன்று காலை 11:10 மணியளவில் அவரது டிஎன்ஏ பொருந்தி உள்ளதாகவும் அவர் கூறினார். அம்மாநில சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் பட்டேலும் இதை உறுதி செய்தார். முதல்வர் பூபேந்திர படேல், விஜய் ரூபானியின் வீட்டுக்கு சென்று, டிஎன்ஏ பரிசோதனை முடிந்ததை அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ராஜ்கோட்டில் இறுதிச் சடங்குகள் நடக்கும் நிலையில், அவரது உடலை எப்போது எடுத்துச் செல்வது என்பது குறித்து குடும்பத்தினர் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.