ECR, OMR சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும் fengal cyclone| tn rain
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக உருவானது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக, இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் கன முதல் மிக கனமழை பெய்யும். இதுதவிர 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை 30ம் தேதி புயல் கரையை கடக்கும்போது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதி கனமழையுடன் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எதுவும் நடத்த கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஐடி ஊழியர்கள் நாளை வீட்டில் இருந்தே பணியாற்றி அறிவுறுத்த அரசு கேட்டுக்கொண்டுள்ளது. நாளை புயல் கடக்கும்போது, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலையில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும். பொதுமக்கள் வெளியில் வருவதை கூடுமானவரை தவிர்த்து, வீட்டில் இருக்க வேண்டும். கடற்கரை, பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்ள இருந்தார். ஊட்டியில் இருக்கும் அவர், ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பெஞ்சல் புயல் காரணமாக, திருவாரூரில் கனமழை பெய்யும் என்பதால் ஜனாதிபதி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.