49 வீடுகளை தீக்கிரையாக்கிய மலேசிய கேஸ் குழாய் வெடிப்பு | gas pipeline | explosion | 112 Injured | m
மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே புத்ரா ஹைட்ஸ் என்ற புறநகர் பகுதி உள்ளது. இங்குள்ள பெட்ரோனோஸ் என்ற, அரசு எரிசக்தி நிறுவனத்திற்கு சொந்தமான கேஸ் குழாய் இன்று திடீரென வெடித்தது. 500 மீட்டர் நீளமுள்ள குழாயில் தீப்பிடித்து, பல நுாறு அடி உயரத்துக்கு தீப்பிழம்புகள் எழுந்தன. பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்து ஏற்பட்ட குழாயில் கேஸ் செல்வதை தடுத்து தீயை அணைத்தனர். சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ரம்ஜானை முன்னிட்டு, மலேசியாவில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பயங்கர சத்தத்துடன் கேஸ் குழாய் வெடித்து சிதறியதால், 49 வீடுகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் 112 பேர் காயம் அடைந்துள்ளனர். தீக்காயம், மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்ட 63 பேர் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து செலன்கார் மாநில முதல்வர் அமிருதீன் ஷாரி கூறியதாவது: பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் இருந்த மக்கள் அனைவரும், வெளியேற்றப்பட்டு, அங்குள்ள மசூதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. நிலைமை முழுதும் கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை அவர்கள் அங்கேதான் இருப்பார்கள் என கூறினார். இந்த விபத்தில் பாதிக்கப்படாத 3 எரிவாயு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. அணுகுண்டு வெடித்து சிதறியது போல், தீ கொழுந்துவிட்டு எரியும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவுகிறது.