பள்ளியை திறக்க கோரி மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு | Girl student sexual abuse case | School
புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 14ம் தேதி ஆசிரியர் மணிகண்டனை பொதுமக்கள் கடுமையாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும், பள்ளியை மூடக்கோரியும் சிறுமியின் உறவினர்கள், ஊர் மக்கள் அப்போது சாலை மறியலில் ஈடுபட்டனர். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 12 மணி வரை 7 மணி நேரம் நீடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி நல்லவாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் புதுச்சேரியில் உள்ள 18 மீனவ பஞ்சாயத்தாரும் ஒன்று கூடி வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் இன்று கடலூர் சாலையில் போராட்டம் நடத்தினர். சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்; மூடப்பட்டுள்ள பள்ளியை திறக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி மறியல் செய்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோரும் களமிறங்கிய போராட்டம் 2 மணி நேரமாக நீடித்ததாலக புதுச்சேரி- கடலூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது.