இஸ்ரேல் ஹசன் நஸ்ரல்லா கதை முடித்ததை வரவேற்ற ஜோ பைடன் | Hassan Nasrallah death | joe biden | Kamala
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசி வருகிறது. ஹிஸ்புல்லாவும் பதில் தாக்குதல் நடத்துகிறது. ஹிஸ்புல்லாவை நிலைகுலைய செய்ய அதன் முக்கிய தளபதிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்கியது. ஒரு வாரத்தில் மட்டும் ஹிஸ்புல்லாக்களின் 3 முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். அடுத்தடுத்து மூன்று தளபதிகளை இழந்து தவித்த நேரத்தில், ஹிஸ்புல்லா தலைவரின் கதையையும் முடித்துள்ளது இஸ்ரேல். ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, தங்களது விமானப்படை ஏவுகணை தாக்கி கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். இது, ஹசன் நஸ்ரல்லாவின் 40 ஆண்டுகால பயங்கரவாத ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக்கான நடவடிக்கை. ஹசன் நஸ்ரல்லாவும் அவரது பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவின் பயங்கரவாதத்தால் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதற்கு அவர்களே பொறுப்பு. அமெரிக்கர்கள் மட்டுமின்றி, இஸ்ரேலியர்கள், லெபனான் மக்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ரல்லா மரணம் நீதிக்கான நடவடிக்கை. ஹெஸ்புல்லா, ஹமாஸ், மற்றும் ஈரானிய ஆதரவு பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ளும் இஸ்ரேலின் உரிமை நடவடிக்கையை அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கிறது என்றும் பைடன் கூறினார். அதிபர் பைடன் கருத்தையே துணை அதிபர் கமலா ஹாரிசும் தெரிவித்துள்ளார். மக்களை பாதுகாக்கவும், பிராந்தியத்தில் நீடித்த ஸ்திரத்தன்மையை அடையவும் ராஜதந்திரம் சிறந்த பாதையாக உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அசைக்க முடியாத அர்ப்பணிப்பை கொண்டிருப்பதாகவும், தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை எப்போதும் ஆதரிப்பதாகவும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.