ஹிமாச்சல் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள் State Government Employees Protest
ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக இலவச அறிவிப்புகளை அள்ளி வீசிய காங்கிரஸ், தேர்தலில் வென்றதும் அவற்றை நிறைவேற்ற பல கோடி ரூபாய் செலவழிக்க நேர்ந்தது. மக்களுக்கான இலவச திட்டங்கள், சலுகைககளை நிறைவேற்ற மாநில அரசுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாததால், கோடிக் கணக்கில் கடன் வாங்க நேர்ந்தது. இதனால், மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான சம்பளம், பென்ஷன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி சம்பளம், பென்ஷன் வழங்கப்பட்டு வந்த நிலையில், அது முறையே, 5, 10ம் தேதிக்கு தள்ளிப் போனது. குறிப்பிட்ட சில துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தாமதமாகக் கூட சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த சூழலில், இந்த ஆண்டு பருவமழையில் ஹிமாச்சல பிரதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம், மேகவெடிப்பு, நிலச்சரிவு என அடுத்தடுத்த இயற்கை சீற்றங்களால், மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பு மிகவும் சீர் குலைந்துள்ளது. மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி கிடைத்தாலும் கூட, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது. ஓட்டல்கள், போக்குவரத்து நிறுவனங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றின் வருமானம் சரிந்ததால், மாநில அரசுக்கான வரி வருவாயும் குறைந்தது. ஹிமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர்.