இந்தியா-வங்கதேச பதற்றத்துக்கு என்ன காரணம் India vs Bangladesh | India Bangladesh border tension why
வங்கதேசத்தில் வெடித்த உள்நாட்டு கலவரத்துக்கு பிறகு சேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் தஞ்சம் கேட்டு இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார். இப்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடக்கிறது. யூனுஸ் வந்ததில் இருந்து இந்தியா, வங்கதேசம் இடையே முட்டல், மோதல் அதிகரித்து விட்டது. இந்தியாவை மலை போல் நம்பி இருந்த வங்கதேசம் இப்போது பாகிஸ்தான், துருக்கியுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்து இருக்கிறது. தேவையின்றி பல விவகாரங்களில் இந்தியாவை சீண்டும் விதத்தில் நடந்து கொள்கிறது. துருக்கி ட்ரோன்களை நம் எல்லையை ஒட்டிய பகுதியில் நிலை நிறுத்தி பதற்றத்தை உண்டு பண்ணியது. பாகிஸ்தானிடம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் கேட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தான் வீரர்களுடன் சேர்ந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ளவும் ஒப்புதல் அளித்து இருக்கிறது. இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் வங்கதேசம் மண்ணில் கால் வைக்கிறது. இப்படி இந்தியா-வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்கனவே சிக்கல் நிலவி வரும் சூழலில், எல்லையில் புதிய பஞ்சாயத்து ஒன்று வெடித்திருக்கிறது. வங்கதேசம் தனது எல்லையின் 90 சதவீதத்துக்கும் கூடுதல் பகுதியை இந்தியாவுடன் தான் பகிர்கிறது. இந்த எல்லையின் நீளம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை விட அதிகம். இதனால் வங்கதேசத்தினர் மிக சுலபமாக இந்தியாவுக்குள் ஊடுருவி விடுகின்றனர். எல்லையில் போதை பொருள், கள்ளநோட்டு கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க சில இடங்களில் முள்வேலி அமைக்கும் பணியை இந்தியா துவங்கியது. ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தை மீறி எல்லையில் எந்த கட்டமைப்பு பணியையும் இந்தியா செய்யக்கூடாது என்று வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வங்கதேசத்துக்கான தூதரக அதிகாரி பிரனய் வர்மாவுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது.