காசா போரில் இறந்தவர்களில் 70% பேர் யார் தெரியுமா? | Israel Gaza war | Victims in gaza | Women and Ch
பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து இயங்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ல் இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களில் சிலரை போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் மீட்டது. மற்றவர்களையும் மீட்போம் என சூளுரைத்தது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து ஹமாசுடன் போரிட்டு வரும் இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் போரால் காசா பகுதியில் மட்டும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போரில் கொல்லப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் பெண்கள், குழந்தைகள் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காசாவில் நடந்த தாக்குதலில் பலியானவர்களின் தனிப்பட்ட விவரங்களை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி வோக்கர் டர்க் கூறியுள்ளார். இந்த தாக்குதல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளை மீறியதற்கான அடையாளம். இதன்படி, 0 முதல் 4 வயதுடைய குழந்தைகள், 5 முதல் 9 வயதுடைய குழந்தைகள் மற்றும் 10 முதல் 14 வயதுடைய குழந்தைகள் என பலியான குழந்தைகள் 3 வகைகளாக உள்ளனர்.