இஸ்ரேல் செய்த நம்பவே முடியாத வினோத தாக்குதல்கள் | Israel vs Hezbollah | Pager walkie talkie Blast
லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கராவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர், வாக்கி டாக்கி அட்டாக் உலகையே அதிர வைத்துள்ளது. முதல் நாள் ஹிஸ்புல்லா பயன்படுத்திய 5000 பேஜர்கள் வெடித்து சிதறின. அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது. அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மறுநாளே ஹிஸ்புல்லாக்களின் நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. 2 சம்பவங்களிலும் சேர்த்து 32 பேர் கொல்லப்பட்டனர். 3300 பேர் பலத்த காயம் அடைந்தனர். 100 பேர் உயிர் ஊசலாடுகிறது. யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இஸ்ரேலின் தாக்குதல் பற்றி தான் மொத்த நாடுகளும் பேசிக்கொண்டு இருக்கின்றன. இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலுக்கும் மொசாட் உளவு அமைப்புக்கும் இப்படி விநோத தாக்குதல்களை நடத்துவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பே பல விதமான சைபர் அட்டாக், விநோதமான வெடிகுண்டு தாக்குதல், நூதன கொலை திட்டங்களை இஸ்ரேலும் அதன் மொசாட் உளவு அமைப்பும் சேர்ந்து செய்து இருக்கின்றன. அந்த விநோத தாக்குதல்களில் முக்கியமான சிலவற்றை பற்றி பார்க்கலாம். 1972ம் ஆண்டிலேயே தனது ஆட்டத்தை இஸ்ரேல் துவங்கி விட்டது. அந்த வருடம் முனிச் கோடைகால ஒலிம்பிக் நடந்தது. இஸ்ரேலின் ஒலிம்பிக் அணியை சேர்ந்த 11 வீரர்களை பாலஸ்தீனிய விடுதலை போராளிகள் கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு பழிக்கு பழிவாங்க இஸ்ரேல் துடித்தது. இப்போது குற்றம் சாட்டப்படும் மொசாட் உளவு அமைப்பு தான் அப்போதும் களம் இறங்கியது. ஒலிம்பிக் வீரர்கள் கொலைக்கு மூளையாக இருந்த பாலஸ்தீன் விடுதலை போராளிகள் குழுவின் தலைவர் மஹ்மூத் ஹம்ஷாரி போட்டுத்தள்ளுவது தான் பிளான். அந்த நேரம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள தனது வீட்டில் மஹ்மூத் ஹம்ஷாரி இருந்தார். அவரது பிளாட்டுக்குள் மொசாட் உளவாளிகள் நுழைந்தனர். வீட்டில் இருந்த தொலைபேசியில் வெடிமருந்தை நிரப்பினர். ஹம்ஷாரி தொலைபேசியை எடுத்து பேசிய போது தூரத்தில் இருந்து அதை மொசாட் உளவாளிகள் வெடிக்க செய்தனர்.