இஸ்ரேல்-ஈரான் போரில் பெரிய ட்விஸ்ட் | Israel vs Iran | Asif William Rahaman | Pentagon | US vs Iran
ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹெஸ்புலா பயங்கரவாதிகளை எதிர்த்து ஒரே நேரத்தில் இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. 2 பயங்கரவாத அமைப்புகளுக்கும் பின்னால் இருந்து ஈரான் பெரிய அளவில் உதவிகளை செய்து வருகிறது. அதே நேரம் இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா, அந்த நாட்டுக்கு பக்க பலமாக நிற்கிறது. போரின் உச்சக்கட்டமாக, ஹமாஸ் உச்ச தலைவன் இஸ்மாயில் ஹனியே, ஹெஸ்புலா உச்ச தலைவன் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது. ஆதரவு அமைப்புகளின் உச்ச தலைவர்களை இஸ்ரேல் தீர்த்துக்கட்டியதை ஈரானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நேரடியாக களத்தில் குதித்தது. இஸ்ரேல் மீது ஒரே நேரத்தில் சக்தி வாய்ந்த 180 பாலிஸ்டிக் ஏவுகணை குண்டுகளை வீசியது. இஸ்ரேலில் ஒருவர் கொல்லப்பட்டார். நேவாடியம் விமானப்படை தளம் சேதம் அடைந்தது. ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலும் களமிறங்கியது. ஈரான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது. எந்த காலத்திலும் அவர்கள் மறக்க முடியாத மரண அடியை இஸ்ரேல் கொடுக்கும் என்று அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சொன்னார். ஈரானின் அணு உற்பத்தி மையங்கள், எண்ணெய் கிடங்குகளை இஸ்ரேல் குறி வைப்பதாக அச்சம் எழுந்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் ஈரானின் உச்ச தலைவர் கமெனியை படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டம் தீட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. உடனடியாக கமெனி ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் இருக்கும் இடத்தை சுற்றி ஏவுகணை தடுப்பு கவசத்தை நிலை நிறுத்தி அரண் அமைத்தது ஈரான். பின்னர், இந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டது. இஸ்ரேல் பிரதமர், ராணுவ அமைச்சரை அமெரிக்கா வரவழைத்து ஈரானுக்கு பதிலடி கொடுப்பது பற்றி ஆலோசித்தது. அமெரிக்காவின் ராணுவ தலைமையமான பென்டகனில் ரகசியமாக பல கட்ட மீட்டிங் நடந்தது. ஒரு வழியாக இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் உயர் மட்டத்துக்கு மட்டுமே இந்த ரகசிய திட்டம் தெரியும். இஸ்ரேல் எந்த ரூபத்தில் பதிலடி கொடுக்கும் என்பது தெரியாமல் ஈரான் தவித்துக்கொண்டு இருந்த பரபரப்பான நேரத்தில் அந்த உயர்மட்ட ரகசியம் சல்லி சல்லியாக உடைந்தது. அக்டோபர் 17ம் தேதி Middle East Spectator என்ற டெலகிராம் சேனலில் ரகசிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வெளியாகின. மிடில் ஈஸ்ட் ஸ்பெக்டேட்டர் என்பது ஈரானில் செயல்படும் அந்நாட்டு ஆதரவு டெலிகிராம் சேனல். அடுத்த சில நிமிடங்களில் ஈரான் முழுக்க இந்த தகவல் மின்னல் வேகத்தில் பகிரப்பட்டது. வெறும் தகவலாக மட்டுமின்றி, ரகசிய திட்டம் அடங்கிய கோப்புகளின் முக்கிய பக்கங்களும் அதில் இருந்தது தான் கூடுதல் அதிர்ச்சி. குறிப்பாக ஈரானில் எந்த இடங்களை தாக்க வேண்டும் என்பது தொடர்பான சாட்டிலைட் படங்கள், தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டிய இஸ்ரேலின் போர் விமானங்கள், ட்ரோன், ஏவுகணைகள் பற்றிய தகவல்கள் அதில் இருந்தன. உடனே ஈரான் உஷாரானது. அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடி விழுந்தது போல் இருந்தது. இதனால் தான் ஈரானுக்கு பதிலடி கொடுப்பதை இஸ்ரேல் தாமதப்படுத்தியது. அக்டோபர் 1ம் தேதி ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு 25 நாட்கள் கழித்து அக்டோபர் 26ம் தேதி புதிய திட்டத்துடன் ஈரானை தாக்கியது. இதில் வெற்றியும் பெற்றது. இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானில் புகுந்து குண்டு மழை பொழிந்தன. ஈரானுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.