உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லடாக்கில் இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு திட்டம் | isro | analog space mission

லடாக்கில் இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு திட்டம் | isro | analog space mission

இந்திய வின்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் முதல் அனலாக் விண்வெளி சோதனை லடாக்கின் லே பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது. இது விண்வெளி ஆய்வு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மையில் கல் ஆக பார்க்கப்படுகிறது. விண்வெளி மற்றும் கிரகங்களுக்கு இடையேயான பயணங்களில், விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்களை கண்டறிந்து அதற்கேற்ப தயார்படுத்திக்கொள்ள இந்த ஆய்வு உதவும். இதற்காக லடாக்கின் லே பகுதியில், வேற்று கிரகங்களில் இருப்பது போன்ற சூழல் கொண்ட கலன்களை இஸ்ரோ அமைத்துள்ளது. விஞ்ஞானிகள் வேற்று கிரகங்களின் சூழ்நிலையில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபடுவார்கள். அனலாக் ஆய்வுக்கு, லே பகுதியை தேர்வு செய்ததற்கும் அறிவியல் காரணம் இருக்கிறது. விண்வெளியில் கிரகங்களில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்வது முக்கியம். செவ்வாய் மற்றும் சந்திரனின் நிலப்பரப்புடன் லே பகுதி ஒத்து போவதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. லே பகுதியில் நிலவும் குளிர், வறண்ட வானிலை, அதிக உயரம் போன்றவை விண்வெளியில் நீண்டகால பயணங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளை சோதிக்க சிறந்த இடமாக இருக்கிறது. லடாக்கில் வெப்பநிலை கோடையில் 3 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குளிர்காலத்தில் மைனஸ் 20 முதல் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். புதிய தொழில்நுட்பங்கள், ரோபோடிக் கருவிகள், வாகனங்கள், விண்வெளியில் பயன்படுத்தப்படும் வசிப்பிடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், மின் உற்பத்தி சாதனங்கள், இடம் பெயர்வு சாதனங்கள், இருப்பு வைக்கும் சாதனங்கள் சோதிக்கப்பட உள்ளன. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் உட்பட மனித விண்வெளி பயணங்கள் மற்றும் கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளில் மேம்படுத்தி கொள்வதற்கு அனலாக் ஆய்வு கைகொடுக்கும். விண்வெளி ஆராய்ச்சிகளில் முதலீடு செய்வதற்கு முன், பூமியில் அதுபோன்ற இதேபோன்ற சூழலை ஏற்படுத்தி ஆய்வு செய்து அதற்கேற்ப தயார் செய்து கொள்வதன் மூலம் காலம், பணம் மற்றும் மனித ஆற்றலை சேமிக்க முடியும். AAKA ஸ்பேஸ் ஸ்டுடியோ, லடாக் பல்கலைக்கழகம், மும்பை ஐஐடி, லடாக் மலை மேம்பாட்டு குழுமம் ஆகியவற்றுடன் இணைந்து இஸ்ரோ அனலாக் சோதனையை நடத்துகிறது.

நவ 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை