ஜம்மு-காஷ்மீரில் வலுவான எதிர்க்கட்சியாகும் பாஜ! Jammu Kashmir election results| JK Results|
ஜம்மு - காஷ்மீரில் 2014ம் ஆண்டுக்கு பின், கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. ஜம்மு - காஷ்மீரிருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின் நடந்த முதல் சட்டபை தேர்தல் என்பதால், இந்த தேர்தலை நாடே உற்று நோக்கியது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் செப்டம்பர் 18, 25 மற்றும் இம்மாதம் 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்தது. பயங்கரவாதத்துக்கு பேர்போன காஷ்மீரில் இம்முறை சிறு வன்முறையும் இன்றி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜ, காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி வேட்பாளர்கள் தவிர பல இடங்களில் உள்ளூர் மக்களின் செல்வாக்கை பெற்ற சுயேச்சைகளும் போட்டியினர். இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக பாஜ இரண்டாம் இடத்தில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, தேசிய மாநாட்டு கட்சி 39 இடங்களிலும், பாஜ 28 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் 8, பிடிபி 4, சுயேச்சைகள் 8 மற்றும் பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டியை பெற 46 இடங்கள் தேவை. தற்போதைய நிலவரப்படி தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணிக்கு 47 இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளதால், அந்த கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி ஆகியுள்ளது. காஷ்மீரில் பாஜ ஆட்சி அமைப்பதை தடுக்க தேர்தலுக்கு பின் பிடிபியுடன் கூட கூட்டணிக்கு தயார் என, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா கூறியிருந்தார்.