குமரி மூதாட்டி சம்பவத்தில் பங்கு தந்தை பகீர் பேச்சு | kanniyakumar | relatives accusing police
கன்னியாகுமரி மத்திக்கோடு பாம்புரி வாய்க்காலைச் சேர்ந்தவர் சாகித் ஷெட்டி, வயது 20. நாகர்கோவிலில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு பஸ்சில் செல்லும் போது திங்கள்சந்தையை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே திருமணமானதை மறைத்து அந்த பெண் சாகித் ஷெட்டியுடன் பழகினார். இவர்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்த நிலையில் இரு வீட்டாருக்கும் தெரிந்ததால் இருவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அப்பெண்ணின் கணவர் இரணியல் போலீசில் மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். திருநெல்வேலியில் இருந்து அப்பெண்ணை போலீசார் மீட்டனர். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்துவிட்டார். இந்நிலையில் பெண்ணுடன் பழகிய போது எடுத்த படங்களை சாகித் ஷெட்டி சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். திங்களன்று அதிகாலை சாகித்தை தேடி போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு டவ்வல் மட்டும் உடுத்திருந்த சாகித்தை பிடிக்க முயன்ற போது அவரது பாட்டி சூசை மரியாள் தடுத்தார். அப்போது போலீசார் அவரை தள்ளிவிட்டனர். ஆடை மாற்றி வருவதாக கூறிச்சென்ற சாகித் ஷெட்டி வீட்டின் பின் வாசல் வழியாக தப்பினார். மயக்க நிலையில் இருந்த சூசைமரியாளை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சூசைமரியாளின் மருமகள் சந்திரகலா ஆன்லைனில் அளித்த புகாரில் போலீசார் மாமியாரை தள்ளி விட்டதில் இறந்து விட்டதாக கூறினார். மூதாட்டி உடலை வாங்காமல் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சூசைமரியாள் உடல் தற்போது ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. அவரது உறவினர்கள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் மாத்திரவிளை வட்டார பங்கு தந்தை மூதாட்டியின் மருமகளை செல்போனில் அழைத்து சமரசம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.