கொல்கத்தாவில் தீவிரமடையும் மாணவர் ஆர்ப்பாட்டம்! kolkata woman doctor | kolkata Nabanna protest
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு ஆஸ்பிடலில் 31 வயதான பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் தொடர்புடைய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளான். சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. டாக்டர் கொலையை கண்டித்து கொல்கத்தாவில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் படிப்படியாக குறைந்து வந்தன. இந்நிலையில் புதிய மாணவர் அமைப்பு பெரிய போராட்டத்தை அறிவித்தது. இதற்கு அரசு அனுமதி தரவில்லை. இருப்பினும் டாக்டர் பலிக்கு பொறுப்பேற்று முதல்வர் மம்தா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொல்கத்தா தலைமை செயலகத்தை முற்றுகையிட மாணவர்கள் 10 கிமீ பேரணியாக வந்தனர். பாதுகாப்புக்காக 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். தலைமை செயலகத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைமை செயலகத்துக்குள் நுழைவதை தடுக்க போலீசார் பேரிக்கார்டு தடுப்பு வேலி அமைத்தனர். மம்தா முகாம் அலுவலகத்தை சுற்றிலும் போலீஸ், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடுப்புகளை உடைத்து தாண்ட முயன்றதால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, தடியடி நடத்தினர். இருப்பினும் மாணவர்கள் கலைந்து செல்லவில்லை. அப்பகுதியே போர்க்களம் போல் மாறியது. இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டி விட சதி செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.