தூங்கும் வளர்ச்சி திட்டங்கள்; ஓடும் நிறுவனங்கள் எல் முருகன் தாக்கு L murugan| mk stalin| dmk| inves
மத்திய இணை அமைச்சர் எல் முருகனின் அறிக்கை: தூத்துக்குடியில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 32 ஆயிரம் கோடிக்கு 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். தென் மாவட்டங்களில் இதுவரை இல்லாத தொழில்வளர்ச்சி ஏற்பட்டு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறார். தூத்துக்குடியில் ஏர்போர்ட் விரிவாக்கம், துறைமுகம் மேம்பாடு, சரக்கு போக்குவரத்து வசதிக்கு தேசிய நெடுஞ்சாலை, ரயில் திட்டங்கள் என தென் மாவட்டங்கள் வளர்ச்சிக்காக மத்திய அரசு முனைப்புடன் பணிகள் செய்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் தமிழக அரசு தங்கள் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டும் செய்கிறது. அமெரிக்கா, ஸ்பெயின், சிங்கப்பூர், ஜப்பானுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் நிலை என்ன என்பதை திமுக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகளாலும் தமிழகத்திற்கு பயனில்லை. மத்திய அரசின் பொருளாதார கொள்கை, உலகளவில் நம் நாட்டின் மீது ஏற்பட்டுள்ள நன்மதிப்பு, மத்திய அரசு திட்டங்கள், தமிழகத்தின் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் போன்ற காரணங்களால் தமிழக தொழில்துறை சாதித்து வருகிறது. திமுகவினர் இதை சாதனையாக விளம்பரப்படுத்த முடியுமா? தமிழகத்தில் 8000 கோடிக்கு முதலீடு செய்ய திட்டமிட்ட 2 வெளிநாட்டு நிறுவனங்கள், சாதகமான சூழல் இல்லை என்று ஆந்திராவுக்கு சென்றுவிட்டன. இதுதான் தமிழகத்தின் எதார்த்த நிலை. 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றுவேன் என்று சூளுரைத்தால் போதுமா? நாங்குநேரி தொழிற்பேட்டை, விருதுநகர், ஜவுளி பூங்கா, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தொழில் மேம்பாட்டு திட்டங்கள் வெற்று அறிவிப்பாகவே உள்ளன. அவற்றின் நிலை பற்றி முதல்வர் அறிவிப்பாரா? சொந்த குடும்பங்கள் வளம்பெற ஆட்சி நடத்தும் திமுகவினரிடம் தமிழகத்தின் நலனை எப்படி எதிர்பார்க்க முடியும்? என மத்திய இணையமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்.