5வது தளத்தில் தீ: அலறியடித்து ஓடிய ஐ.டி. ஊழியர்கள்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மாதப்பூர் ஹைடெக் சிட்டியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் பல ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதன் 5வது மாடியில் உள்ள உணவகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தளம் முழுவதும் தீ பரவியது. அங்கிருந்த நிறுவனங்களின் பொருட்களும் தீயில் எரிந்தன. கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் ஐடி ஊழியர்கள் கொஞ்சம் பேர் மட்டுமே இருந்தனர். அவர்களும் அலறியடித்து வெளியே ஓடினர். எனினும் சிலர் காயமடைந்தனர். 6 வண்டிகளுடன் தீயணைப்பு குழுவினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். விபத்துக்கான காரணம் என்ன? மற்றும் சேத விவரங்கள் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் கூறினர்.
டிச 21, 2024