கல்வி நிதி விவகாரம் ஐகோர்ட்டில் காரசார விவாதம்! | Madras High Court | Education fund | TN Govt
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 2025-2026ம் ஆண்டுக்கு, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சேர்க்கை இதுவரை துவங்கவில்லை. மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க வேண்டும் என கோவையை சேர்ந்த வே.ஈஸ்வரன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விபரங்களை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார். புதிய கல்விக் கொள்கை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீ்டுக்கான கல்விக் கட்டண தொகையை மத்திய அரசு ஒதுக்கவில்லை. பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை என வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தரமாட்டோம் என கூறுவது, மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையை காட்டுகிறது என கூறினார்.