மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை அசைக்கும் ஆசிரியர்கள் | Mamata banerjee | TMC | Teachers issue | 15
மேற்கு வங்கத்தில் 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை சட்டசபை தேர்தலில் வென்று, 15 ஆண்டுகளாக முதல்வராக கோலோச்சி வருவகிறார் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. சாரதா சிட்பண்ட் ஊழல், நிலக்கரி முறைகேடு, கால்நடை கடத்தல், பொது வினியோக திட்ட குளறுபடி என ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும் ஹாட்ரிக் முதல்வராக தொடர்கிறார். 2011ல் காங்கிரஸ், 2016ல் மார்க்சிஸ்ட் கம்யூ., 2021ல் பா.ஜ என எதிர்க்கட்சிகள் மாறினாலும், ஆளுங்கட்சியாக திரிணமுல் காங்கிரஸ் மாறவில்லை. 2026ல் தமிழகம், புதுச்சேரி, கேரளாவுடன் மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில், மம்தா ஆதிக்கத்துக்கு தடை போடும் விதமாக ஆசிரியர் நியமன முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஆட்சியில் மம்தா கட்சியினர் லட்சக்கணக்கில் பணம் பெற்று, ஆசிரியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது. வழக்கை விசாரித்த கொல்கட்டா ஐகோர்ட், 25,000 ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்தது. இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. 25,000 பேரும் ஒட்டு மொத்தமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டதால், முறையான தகுதியில் வேலை பெற்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய ஆசிரியர் தேர்வு பணியை முழுக்க முழுக்க சுப்ரீம் கோர்ட் கண்காணிக்கும். ஏற்கனவே, பணம் கொடுத்து வேலை வாங்கிய யாரையும் விண்ணப்பிக்க அனுமதிக்கக் கூடாது எனவும் கோர்ட் கறார் காட்டி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, வேலை இழந்த 25,000 பேரின் குடும்பங்களும் மம்தாவுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.