ஸ்டாலின் கிளம்பும் வரை தலைக்காட்டாத தலைவர்கள் mk stalin| dmk alliance| congress leaders
விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் மகன் சிவராஜா - சாலுபாரதி திருமணத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் நடத்தி வைத்தார். காங்கிரஸ் மாவட்ட தலைவரின் இல்லத் திருமண விழா, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் நிலையில், அவரை காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் வந்து வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராஜசேகரனை தவிர, காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் வரவில்லை. மேடையில், காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் யார் யார் பேசுகின்றனர் என்ற கேள்வி எழுந்தபோது, அங்கு யாரும் இல்லை. இதனால், ராஜா சொக்கர் வரவேற்று பேசிய பின், அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்தி பேசினார். மணமக்களை வாழ்த்திவிட்டு ஸ்டாலின் சென்ற பின், சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், எம்.பி., மாணிக்கம் தாகூர், அகில இந்திய காங்கிரஸ் செயலர் மயூரா ஜெயகுமார், விஜய் வசந்த் எம்.பி., உள்ளிட்டோர் அறிவாலய திருமண மண்டபத்துக்கு வந்து, மணமக்களை வாழ்த்தினர். மணவிழா அழைப்பிதழில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை படம் போடவில்லை என்பதால், அவர் புறக்கணித்து விட்டார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்தபோதும், அவரும் வராமல் தவிர்த்துள்ளார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முந்தைய நாள் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றுள்ளார். மேடையில் ஐந்து நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டு இருந்தன. அதில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜா சொக்கர், சிவராஜசேகரன், முதல்வரின் உதவியாளர் தினேஷ் ஆகியோர் மட்டும் அமர்ந்திருந்தனர்.