வர்த்தகத்தை மீட்டெடுக்க பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை | M.K.Stalin | Letter to PM Modi | US tariffs
அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதித்துள்ள வர்த்தகத்தை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்க கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட மத்திய அரசு எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன். தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். தற்போதைய 25% வரி, அதன் தொடர்ச்சியாக 50% வரி அதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கவலை அளிக்கும் ஒரு பிரச்னை குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அமெரிக்க சந்தையை தமிழகம் அதிகமாக சார்ந்திருப்பதால், இறக்குமதி வரியின் தாக்கம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக இருக்கும். இந்த வரிவிதிப்பு தமிழகத்தின் உற்பத்தி துறை, வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும். தமிழக ஜவுளித்துறையில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் வலுவான உற்பத்தித் துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்கிறது. ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் பிரதமர் மோடி அவசரமாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், தொழில்துறை சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்திட வேண்டும்.