வாகன இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விட்ட ஆசாமிகள் | Motor vehicle inspector | threatened | Puliyara
கொன்னுடுவேன்னு மிரட்டுறாங்க மோட்டார் இன்ஸ்பெக்டர் கதறல் வீடியோ வைரல் அதிகாரிகள் ஷாக் தென்காசி மாவட்டம் புளியரை வாகன சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருப்பவர் குமார். இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். தமிழகத்தில் இருந்து புளியரை எல்லை வழியாக கேரளாவுக்கு செல்லும் வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்தார். அப்போது, கேரளாவுக்கு எம் சாண்ட் ஏற்றி சென்ற லாரியை மடக்கி குமார் சோதனை செய்தார். லாரிக்கு பெர்மிட் இல்லாததை கண்டுபிடித்தார். ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்தார். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் வந்து, லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதனைத்தொடர்ந்து வாகன உரிமையாளரின் ஆட்கள், சோதனைச்சாவடிக்கு வந்தனர். அங்கு தனது அறையில் அமர்ந்திருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குமாருடன் தகராறு செய்தனர். நீங்க பண்றது சரியில்லை; எங்க வண்டியை விட்டுடுங்க. இல்லன்னா நடக்கறதே வேற என கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. உடனே குமார் புளியரை போலீஸ் நிலையத்துக்கு போனில் தகவல் சொன்னார். போலீசார் சோதனைச் சாவடிக்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் ஆசாமிகள் தப்பி ஓடி விட்டனர். அதைத் தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் குமார், கடமையை செய்ததற்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். உயிருக்கு பாதுகாப்பு இல்லை; போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமாக பேசி, வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அது தென்மாவட்டங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.