புகார்தாரர் மேல்முறையீடு செய்ய கோர்ட் அவகாசம்
கர்நாடகாவில் மைசூர் வட்டம் சகரே கிராமத்தில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 3.16 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தில் வீட்டு மனைகள் அமைக்க, முடா(MUDA) எனப்படும் மைசூர் நகர்புற வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்தியது. அதற்கு மாற்றாக, மைசூரில் விலை மதிப்புள்ள விஜயநகர் பகுதியில் 14 வீட்டு மனைகளை பார்வதிக்கு முடா ஒதுக்கியது. நிலம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக கூறி எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. போராட்டங்களை நடத்தின. முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். இதை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் சித்தராமையா முறையிட்டார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது. சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகார் அடிப்படையில் முதல்வர் சித்தராமையா, மனைவி பார்வதி அவரது அண்ணன் மல்லிகார்ஜுனசாமி, அவருக்கு நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோர் மீது, கடந்தாண்டு செப்டம்பரில் லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியது. இதனிடையே தமக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை முடாவுக்கே திருப்பி ஒப்படைத்தார் பார்வதி. ஊழல் புகாரை விசாரித்த லோக் ஆயுக்த அதிகாரிகள், முதல்வர் சித்தராமையா, மனைவி பார்வதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. அவர்களுக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லை. தவறுகள் அனைத்தும் அதிகாரிகளால் நடந்துள்ளது என்று விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.