சாலை, தண்டவாளங்களில் நீர் தேங்கி தவிக்கும் மக்கள் | Mumbai Rain | Pune | Maharashtra Rain | IMD
மஹாராஷ்டிராவில் பருவமழை முன்பே துவங்கி விட்டதால், மாநிலம் முழுதும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் சென்ற வாரமே மழை தொடங்கி விட்டு விட்டு பெய்தது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை மிக கனமழை கொட்டியதால் சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் வாகன போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ரயில் தண்டவாளத்தில் நீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. போதிய வெளிச்சம் இல்லாமை மற்றும் மழை காரணமாக விமான போக்குவரத்தும் அங்கு பாதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையின் தென்பகுதியில் உள்ள நரிமன் பாயின்ட் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 40 மிமீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. மும்பையில் பல்வேறு இடங்களில் இன்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. அதே போல் புனேவிலும் நேற்று முதல் பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. புனேவின் பாராமதியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை துணை முதல்வர் அஜித் பவார் பார்வையிட்டார். மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியிலும் மழை விடாது பெய்து வருகிறது. மாநிலத்தில் 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.