சட்ட கல்லூரி மாணவி சம்பவம்: மகளிர் ஆணையம் பகீர்; பதற்ற நிலை NCW chairman Kolkata Police crime law c
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த சம்பவம் நடந்து 10 மாதங்களுக்குள் அதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. இந்த முறை சம்பவம் நடந்த இடம் தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரி வளாகம். கொடூரத்துக்கு ஆளானவர் 24 வயது சட்டக்கல்லூரி மாணவி. இந்த மாணவி மீது, மனோஜித் மிஸ்ரா என்ற முன்னாள் மாணவர் ஆசைப்பட்டார். தன் காதலை மாணவியிடம் சொன்னார். ஆனால், மாணவி ஏற்க மறுத்து விட்டார். நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன் என மாணவி காரணம் சொன்னார். இதை மனோஜித் மிஸ்ரா ஏற்கவில்லை. கடும் கோபமானார். நீ என்னைத்தான் காதலிக்க வேண்டும்; என்னைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்றார். என்னை காதலிக்கலைன்னா என்ன நடக்கும் தெரியுமா? உன் லவர் கை காலை உடைச்சி வீட்ல உட்கார வச்சிடுவேன்; உன் அம்மா, அப்பா மீது பொய் வழக்கு போட்டு ஜெயில்ல போட்ருவேன் என மிரட்டினார். மனோஜித் மிஸ்ரா இந்தளவுக்கு தில்லாக மிரட்ட காரணம், அந்த சட்டக்கல்லூரியின் திரிணமுல் காங்கிரஸ் மாணவர் பிரிவு பொதுச்செயலாளரே அவர்தான். இதனால் என்ன செய்வது என புரியாமல் தவித்தார், மாணவி. விஷயத்தை காதலனிடம் சொன்னபோது, அவரும் பயந்து போனார். இந்த சூழலில்தான் 2 நாளுக்கு முன் சட்டக்கல்லூரி வளாகத்தில் உள்ள செக்யூரிட்டி அறையில் வைத்து மாணவியை மனோஜித் மிஸ்ராவும், 2 மாணவர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி பயந்து போய் வீட்டிலேயே முடங்கி விடாமல் துணிச்சலாக கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார். மாணவியை பலாத்காரம் செய்ததற்காக திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி மனோஜித் மிஸ்ராவும், இந்த இழிசெயலுக்கு உடந்தையாக இருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் சைப் அகமது வயது 19, Zaib Ahmed, பிரமித் முகர்ஜி வயது 20 Pramit Mukherjee, ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு சட்டக்கல்லூரியில் வைத்தே மாணவியை திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி பலாத்காரம் செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய அரசியல் பிரச்னையாக மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து கையில் எடுத்திருக்கிறது. 3 நாளில் அறிக்கை அளிக்க மேற்கு வங்க டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் Vijaya Rahatkar அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதுபோல ஒரு கொடூர சம்பவம் உலகில் வேறெங்கும் நடந்ததாக தெரியவில்லை என அதிர்ச்சியை வெளிப்படுத்தினார், ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார். கல்லூரி வளாகத்தில் இப்படியொரு கேவலமான காரியத்தை செய்ய அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது? காமுகர்களுக்கும் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொடர்பு இல்லாமல் இது நடக்க முடியாது எனவும் அர்ச்சனா மஜும்தார் குற்றம்சாட்டினார். மாணவியை பலாத்காரம் செய்த மனோஜித் மிஸ்ரா மம்தாவின் அண்ணன் மகன் அபி ேஷக் பானர்ஜி மற்றும் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த அமைச்சர்களுடன் இருக்கும் படங்களை வெளியிட்டு பாஜ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் காமுகன் மனோஜித் மிஸ்ரா நெருக்கமாக இருக்கும் படங்கள், மேற்கு வங்க மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெண் டாக்டர் கொலையால் திரிணமுல் காங்கிரசின் பேர் கெட்டுப்போன நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் உடனடியாக விளக்கமளித்தது. சட்டக்கல்லூரி மாணவி சம்பவத்தில் தவறு செய்தவர் யாராக இருந்தாலும் திரிணமுல் காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட் எந்த கட்சியில் இருந்தாலும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு என திரிணமுல் மாணவர் பிரிவு தலைவர் திரிநன்குர் பட்டாச்சார்யா கூறினார். சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரியில் பல ஆண்டாக மாணவர் சங்கமே செயல்படவில்லை. அதுமட்டுமல்ல திரிணமுல் காங்கிரசின் மாணவர் சங்க நிர்வாகிகள் பட்டியலில் மனோஜித் மிஸ்ரா ெ பெயரே இல்லை எனவும் திரிநன்குர் பட்டாச்சார்யா கூறினார். எனவே, இந்த பலாத்கார சம்பவத்துக்கும் திரிணமுல் காங்கிரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை; இந்த விவகாரத்தை தேவையில்லாமல் பாஜ அரசியல் ஆக்க முயற்சிக்கிறது. கொடூரமான குற்றங்களை செய்த குற்றவாளிகளுடன் பாஜ தலைவர்கள் இருக்கும் படங்கள் எங்களிடமும் இருக்கிறது. நாங்களும் வெளியிடுவோம் என பாஜவுக்கு திரிநன்குர் பட்டாச்சார்யா சவால் விட்டார். ஆனாலும், மாணவி பலாத்கார சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவதால், மாநிலமே பதற்றமாக மாறிப்போயிருக்கிறது.