ஆம்ஸ்ட்ராங் சம்பவம் இப்படி தான் நடந்தது-பகீர் தகவல் | BSP Armstrong news | BSP leader armstrong
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை மொத்த சென்னையையும் உலுக்கிப்போட்டுள்ளது. தேசிய கட்சியின் மாநில தலைவரையே ஒரு கும்பல் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைநகரில் நடந்த இந்த சம்பவம் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. ஆம்ஸ்ட்ராங் அடிப்படையில் ஒரு வக்கீல். தலித் மக்களுக்காக பாடுபடக்கூடியவர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில கட்சியின் தலைவராக தீவிர அரசியலில் ஈடுபட்டார். ஆம்ஸ்ட்ராங் மீதும் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. எப்போதும் அவர் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பார். அவரை சுற்றி நண்பர்களும் ஆதரவாளர்களும் இருப்பார்கள். தனது பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற துப்பாக்கியும் வைத்திருந்தார். அப்படி இருக்க ஆம்ஸ்ட்ராங்கை அந்த கும்பல் எப்படி கொலை செய்தது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்குக்கு வீடு உள்ளது. பக்கத்தில் கட்சி அலுவலகம் செயல்படுகிறது. அவரது குடும்பம் அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி பெரம்பூர் வீடு, கட்சி ஆபீஸ் செல்வது வழக்கம். நேற்று மாலையிலும் அங்கு சென்றிருந்தார். இரவு 7 மணி அளவில் தனது வீட்டு பக்கத்தில் நண்பர்கள் வீரமணி, பாலாஜி ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்த போது தான் இந்த கொலை நடந்தது. அவருடன் இருந்த 2 நண்பர்களையும் அந்த கும்பல் வெட்டியது. வீரமணிக்கு தலை, முதுகில் வெட்டு விழுந்தது. பாலாஜிக்கு காலில் வெட்டு விழுந்தது. பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் டூவீலரில் தப்பி சென்றது. அவர்கள் தப்பி செல்லும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங்கை அந்த கும்பல் சில நாட்களாக தீவிரமாக நோட்டம் பார்த்துள்ளது. கொலைக்கு முன்பும் அந்த வீட்டருகே நோட்டம் பார்த்தனர். சாதாரண உடையில் போனால் சந்தேகம் வரும் என்று நினைத்த கும்பல், உணவு டெலிவரி செய்யும் zomato ஊழியர்களின் யூனிபார்மை அணிந்து வந்திருந்தனர். பக்கத்தில் உள்ள ஓட்டல் அருகே நின்றனர். ஆம்ஸ்ட்ராங்குக்கு யார் மீதும் சந்தேகம் இல்லாததால் சாதாரணமாக பேசிக்கொண்டு இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அவரை வெட்டி சாய்த்தது. கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் பட்ட ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனையில் இறந்தார். கொலை நடந்த இடத்தில் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. அவரது உடல் கொண்டு செல்லப்பட்ட ராஜிவ் காந்தி மருத்துவமனையிலும் ஆதரவாளர்கள் திரண்டனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசை கண்டித்தும், அரசை கண்டித்தும் அவர்கள் கோஷம் போட்டனர். திரைப்பட இயக்குனர் ரஞ்சித், தீனா உள்ளிட்டோரும் வந்தனர். ஆம்ஸ்ட்ராங் உடலை பார்த்து ரஞ்சித் அழுதார். இதற்கிடையே முக்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர். சிலர் சரண் அடைந்தனர். இதுவரை 8 பேர் சிக்கி உள்ளனர். அதில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் தம்பியும் ஒருவர்.